×

புதுவை பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட முதியவர் கைது

*பாஜ பெண் நிர்வாகி வழக்கில் திடீர் திருப்பம்

புதுச்சேரி : புதுவைப்பெண்ணில் ஆபாசப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புதுக்கோட்டை முதியவரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஹேமமாலினி (50), செவிலியர் படிப்பை முடித்துவிட்டு உடல் நலம் குன்றியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதற்காக தனியாக அலுவலகம் வைத்து கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருமணமாகி ஆறு ஆண்டுகளிலேயே அப்பெண்ணின் கணவர் வேறு, ஒரு பெண்ணுடன் சென்று விட்டதால் மகன்களுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இரண்டு மகன்களுக்கும் திருமணமாகவே தனிமையை உணர்ந்த இவர், தனது இரண்டு மகன்களின் ஒப்புதலுடன் மறுமணத்துக்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே புதுக்கோட்டையை சேர்ந்த ஞானசேகர்(57) உடன் பழக்கம் ஏற்பட்டு, லிவிங் டூ கெதர் என்ற முறையில் கடந்த ஒரு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். முன்னதாக தனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும், டிரேடிங் பிசினஸ் செய்து நல்ல முறையில் சம்பாதித்து வருவதாக ஞானசேகர் கூறியுள்ளார்.

திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என்று சொல்லவே இதனை, நம்பிய பெண் புதுக்கோட்டைக்கு சென்று ஒரு அப்பார்ட்மெண்டில் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அவருடன் சேர்ந்து வாழும்போது ஆறு மாத காலத்திலேயே ஞானசேகரன் முன்னாள் மனைவியின் குடும்பத்தார், இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பிரச்னை செய்ய ஆரம்பித்துள்ளனர்.அப்போதுதான் ஞானசேகரனுக்கு முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகவில்லை என்ற விவரம் ஹேமமாலினிக்கு தெரிய வந்துள்ளது. மேலும் சில பெண்கள், அபார்ட்மெண்டுக்கு வந்து, ஞானசேகரனிடம் என்னை ஏமாற்றி விட்டாயே, இவள் யார் என்று கூறி பிரச்னை செய்தனர்.

அப்போதுதான் ஞானசேகர் நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பது ஹேமமாலினிக்கு தெரியவந்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய வாழ்க்கைத் துணை தேடிவந்த இடத்தில் இவ்வளவு பிரச்னையா? எனக்கூறி பெண் ஞானசேகரை பிரிந்து புதுச்சேரி திரும்பிவிட்டார். புதுச்சேரிக்கு வந்த பிறகும் ஞானசேகர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தினாராம். மேலும் அப்பெண்ணின் உறவினர்களை தொடர்பு கொண்ட ஞானசேகர் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு புதுச்சேரிக்கு வந்துநெருக்கடி கொடுத்துள்ளார்.

அப்பெண்ணின் உறவினர்கள் உனக்கு திருமணம் ஆகி இன்னும் விவாகரத்து ஆகவில்லை. எனவே பெண்ணை உன்னுடன் அனுப்பி வைக்க மாட்டோம் என ஞானசேகரிடம் தெரிவித்துள்ளனர். தெரிவித்த பிறகு ஞானசேகர், நாம் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என்னிடம் உள்ளது. நீ குடும்பம் நடத்த வராவிட்டால் இதனை உறவினர்களுக்கும், மகன்களுக்கும் அனுப்பி, உன்னை அசிங்கப்படுத்துவேன் என மிரட்டியுள்ளார். அதன்பிறகும், அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த போது எடுத்த புகைப்படங்களை ஹேமமாலினிக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் பயந்த ஹேமமாலினி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார்.

மேலும் இரண்டு மகன்களுக்கும் அந்த புகைப்படங்களை ஞானசேகர் அனுப்பியிருக்கிறார். மேலும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்திலும் ஞானசேகர் பதிவேற்றமும் செய்துவிட்டார். இது குறித்து ஹேமமாலினி புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து ஞானசேகர் மீது வழக்கு பதிந்த போலீசார், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார், புதுக்கோட்டையில் ஞானசேகரை கைது செய்தனர். அவரிடமிருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். ஞானசேகரை தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

போலீஸ் கூறியும் கேட்காத ஞானசேகர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஞானசேகர் புகார் மனுவை அளித்திருந்தார். அதில், லிவிங் டூ கெதர் வாழ்க்கையில், வாழ்ந்த பாஜக பெண் நிர்வாகி ஹேமமாலினி ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்து சென்றதாகவும், பல ஆண்களை இது போல ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஹேமமாலினி, ஞானசேகர் மீது புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், உறவினர்கள், நண்பர்கள், மகன்களுடன் இருக்கும் படத்தையெல்லாம் வெளியிட்டு பல்வேறு நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக ஞானசேகர் தவறாக சித்தரித்துள்ளார். தனிமையில் இருக்கும் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்புவதாகவும் புகாரில் கூறியிருக்கிறார். தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார், ஞானசேகரனை தொடர்பு, கொண்டு பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை யாருக்கும் அனுப்பக்கூடாது. அப்படி அனுப்பினால், வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளனர். அப்போது அதெல்லாம் முடியாது. ஹேமமாலினி என்னுடன் வாழ வேண்டும். அவர் சேர்ந்து வாழவில்லையென்றால் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றுவேன் எனக்கூறியுள்ளார். இதனால் போலீசார் வேறுவழியின்றி ஞானசேகரனை கைது செய்துள்ளனர்.

The post புதுவை பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puduwai ,BJP ,Puducherry ,Pudukottai ,Puduvaibpenni ,Hema Malini ,Villayanur ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை